அரசியல் களத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கருத்துக்களை திராவிட வெற்றிக் கழகம் (DVK) கட்சியின் தலைவர் மல்லை சத்யா முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுகவின் நிலைப்பாடு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
‘சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைத்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்கள். மதிமுக தலைவர் வைகோ, தன்னை ஒரு திராவிட இயக்கத்தின் தொண்டர் என்று பலமுறை கூறி வந்துள்ளார். ஆனால், தற்போது அவர் 99.9 சதவீதம் திமுக கூட்டணியிலிருந்து விலகி, தன் மகன் துரையை காப்பாற்ற தமிழக வெற்றி கழகம் பக்கம் சாய்ந்து வருவதாகத் தோன்றுகிறது. மதிமுக இப்போது ‘மகன் திமுக’வாக மாறிவிட்டது,’ என்று மல்லை சத்யா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ‘வைகோவின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு தான் வாக்களித்தார்கள் என துரை வைகோ கூறியதாகத் தெரிகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, திமுக கூட்டணியின் நிலை என்ன என்பது தெளிவாகிறது. கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு முழுமையாக இல்லை. மக்களின் அதிருப்தி இல்லாமல் நடைபெற்ற ஒரு ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்த மதிமுக, திமுகவிடமிருந்து விலகிச் செல்வதைப் பார்க்க முடிகிறது,’ என்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கைகளைப் பிடித்து, அவருக்கு எப்படி உறுதுணையாக இருந்தேனோ அதேபோல மு.க. ஸ்டாலினுக்கும் இருப்பேன் என்று பேசிய வைகோ, இப்போது தமிழக வெற்றி கழகம் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காகவே மதிமுகவை அவர் ‘மகன் திமுக’வாக மாற்றிவிட்டார். யார் விலகிச் சென்றாலும் திமுக இயங்கிக் கொண்டுதான் இருக்கும். கூட்டணி கட்சிகள் வெளியேறியதால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. திமுக ஒரு பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழும். தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களில் 10-இல் நான்கு சம்பவங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன,’ என்றும் மல்லை சத்யா குற்றம்சாட்டினார்.