தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வர் விஜய், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள குதிரை பேரம், யானை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் என பல வழிகளைக் கையாள்வதாகவும், அவருக்கு விரைவில் ஒரு பெரிய அரசியல் ஆச்சரியம் காத்திருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகம் இதுவரை கண்டிராத ஆரோக்கியமற்ற அரசியல் நிலையை சந்தித்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் வேதனை தெரிவித்தார். முதல்வர் விஜய், அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு தருவதாகக் கூறி, பல கட்சிகளைத் தன் பக்கம் ஈர்த்துள்ளதாகவும், இதற்காக பனையூருக்குச் சென்று காவடி தூக்கும் நிலையை காணும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் அரியணை ஏற பெரும்பான்மை ஆதரவைப் பெற அவர் கையாண்ட விதம், தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க கட்சியுடன் தற்போது இணைந்து பயணிக்கும் அரசியல் நாகரீகம் அரங்கேறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது குதிரை பேரமா, கழுதை பேரமா, ஒட்டக பேரமா, விசுவாச பேரமா அல்லது துரோக பேரமா என வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முதலமைச்சர் பதவியை தவிர்த்து அமைச்சர் பதவியை தாரை வார்த்து தருவதாக ஆசை காட்டி, அதிமுக விசுவாச தலைவர்களை விலை பேசி, அவர்களை வீதியில் விட்ட அற்பத்தனமான அரசியலையும் தாய் தமிழ்நாடு கண்டு வேதனை அடைந்ததாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தற்போது, அதிகாரப் பகிர்வு என்ற ஆசை வார்த்தைகளால், மதிமுகவில் பிளவு ஏற்பட்டு, வைகோ தவித்து வருவதாகவும், பொதுவுடைமை இயக்கமும் வாய்மூடி மௌனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் கொடுத்த 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற வார்த்தைதான் பொதுவுடைமை இயக்கத்தை ஆட்டி படைப்பதாகவும், இது அலாவுதீன் அற்புத விளக்கு போல செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் நீண்டகாலமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் இந்த தடுமாற்ற அரசியலைப் பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். முதல்வர் விஜய், இந்த அநாகரிக அரசியலைக் கைவிட்டு, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து, தனது த.வெ.க கட்சியை வளர்த்தெடுப்பாரா அல்லது ஆள் பிடிக்கும் அதிகார அரசியலைத் தொடர்ந்து கட்சித் தாவலை ஊக்குவிப்பாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும் என்றும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொறுமையோடு காத்திருந்தால், விரைவில் ஒரு அரசியல் ஆச்சரியம் தமிழகத்தில் நடக்கும் என்றும் அவர் கூறினார்.