நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவான பழைய சோறு, நீராகாரம் போன்றவை காலை வேளையில் உட்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இந்த பழமையான உணவை நாம் இப்போது உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காண்போம்.
இரவில் நீர் ஊறிய பழைய சோற்றை, அந்த நீரோடு அருந்தினால் ஆண்களுக்கு ஆண்மை பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும். மேலும், பழைய சோறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக, பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை போன்ற நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.
செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது செரிமான சக்தியைக் கூட்டும். பழைய சோறு குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் முறையான நொதித்தல் ஏற்பட்டு, உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாகத் தோன்றும்.
பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள் நீங்கும். காலையில் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும். எனவே, வேலைக்குச் செல்பவர்கள் தயிர்/மோர் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். இயற்கையான தட்பவெட்ப நிலையில் மண் பானையில் பழைய சோற்றினை ஊற வைப்பது இன்னும் சிறந்தது.