தமிழக அரசின் நிதிநிலை குறித்து, ஆளும் தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) தான் படித்துப் பார்த்ததாக பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இந்த வெள்ளை அறிக்கையில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையை இந்த வெள்ளை அறிக்கை தெளிவாகக் கூறியிருப்பதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்றும், இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு தமிழக மக்கள் மீதும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மொத்த வருவாயில் 22.8% வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது என்றும், இது மிகவும் கவலைக்கிடமான நிலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம் 2021-22ல் 5.93% ஆக இருந்தது, ஆனால் 2025-26ல் அது 5.45% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரம், போக்குவரத்து, நுகர்பொருள் விநியோகம் போன்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால் பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அமைப்பு சார்ந்த ஊழல்களால் பெரும் வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் குறுகிய காலமே உள்ளது. எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும், இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு "செயல்திறன் மிக்க" ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.