கரூர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதல்வர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் கடும் கோபம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களில் செந்தில் பாலாஜியை முதலில் சிறைக்கு அனுப்பும் முயற்சியில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே அமலாக்கத் துறையின் வழக்கு செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ள நிலையில், அவர் சிறைக்குச் சென்றால் எளிதாக வெளியே வர முடியாத அளவுக்கு வழக்குகள் வலுவாக இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் முக்கிய அதிகாரிகளை அழைத்து பேசிய அவர், செந்தில் பாலாஜியின் கடந்த கால முறைகேடுகள் அனைத்தையும் தோண்டி எடுக்க வேண்டும் என்றும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி தன் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றம் மற்றும் சிறை என கழிக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஏதேனும் அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்குமாறு முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார். தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய முதல்வர், 'என்னுடைய முகத்தை ஒரு முறை பார்த்து விட மாட்டோமா என என்ன காண வந்த மக்களின் உயிர்களில் விளையாடி விட்டார்கள். போதிய பாதுகாப்பை கடந்த கால அரசு கொடுத்திருந்தால், கரூர் துயர சம்பவம் நடந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த ஜூன் மாத இறுதிக்குள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். சமீபத்திய டெல்லி பயணத்தின் போது, செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.