விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சிறுவாலை கிராமத்தில், பெற்றோர் வாங்கிய ரூ.50,000 கடனுக்காக, 15 வயது மாணவனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரன் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.50,000 முன்பணம் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக, அவரும் அவரது மனைவியும் பிரபாகரனின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். வாங்கிய கடன் தொகை முழுமையாகக் கழிவதற்குள் இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதால், பிரபாகரன் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தரவில்லை.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரன், மாணவனின் தந்தையை கடுமையாகத் திட்டி, மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. குடும்பச் சூழல் காரணமாக பணத்தைத் தாமதமாகத் தருவதாக அவர் கூறியபோதும், உடனடியாகப் பணம் கேட்டு பிரபாகரன் மிரட்டியுள்ளார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவனை, பள்ளி அருகே மறைவான இடத்தில் தடுத்த பிரபாகரனும், அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாணவனின் வாயில் துணியைக் கட்டி, காலணியால் தாக்கியதாகவும், வயிறு மற்றும் முதுகிலும் அடித்து, பிளேடால் வாயைக் கிழித்ததாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காயமடைந்த மாணவன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனின் தந்தை கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்து, தலைமறைவான மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.