சென்னை மாநகராட்சியில், சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் பழுதடைந்த மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அகற்றாவிட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள் முதல் தெருக்கள் வரை, பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்கள், குப்பையாக காட்சியளித்து வருகின்றன. இந்த வாகனங்களுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதோடு, சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகவும் காரணமாகின்றன.
மேலும், பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முன்னர், இதுபோன்ற வாகனங்களை அகற்றி, உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, ஆவணங்களை சமர்ப்பித்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை பொதுமக்களுக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, சாலையை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், மாநகராட்சி பணியாளர்கள் 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர். அதில், '24 மணி நேரத்திற்குள் வாகனங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், வாகன உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
