தமிழ்நாடு ஆவணங்கள் பதிவுத்துறையில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் இணையதளம் வழியாக மனை, அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டு வசதி வாரிய விற்பனை பத்திரங்கள் மற்றும் வங்கி கடன் அடமான ஆவணங்களை எளிதாக பதிவு செய்யலாம்.
இந்த புதிய நடைமுறை ஆதார் சரிபார்ப்பு, மின்னணு கையொப்பம் மற்றும் UIDAI அங்கீகரித்த கருவிகள் மூலம் செயல்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வருகை இல்லா பதிவு முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்த 24×7 ஆன்லைன் பதிவு முறை, பொதுமக்கள் ஆவணங்களை பதிவு செய்வதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும். மேலும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். குறிப்பாக, தொலைதூரங்களில் வசிப்பவர்களுக்கும், அலுவலக வேலை காரணமாக நேரில் வர இயலாதவர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு, டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய இணையவழி பத்திரப்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆவணப் பதிவு செயல்முறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.