டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் விஜய் இன்று (மே 27) நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும், மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பிரதமர் மோடி தனது நெதர்லாந்து பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை இந்தியாவுக்கு மீட்டு வந்ததற்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஜனவரி மாத குறிப்பாணைக்கு தெளிவுரை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
வான்வழி அமைப்பு மையம் (CABS) போன்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் (DRDO) மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளதால், இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்து வருவதாக முதல்வர் விஜய் கவலை தெரிவித்தார். 2026-ல் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.