அபுதாபியில் உள்ள பராக் அணுமின் நிலையத்தின் ஜெனரேட்டர் அறையில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. நேற்றைய இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கதிர்வீச்சு பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தின் 4 உலைகளும் சீராக இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது, ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தாக்குதல் நடத்தியது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சமீபத்திய புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் முற்றுகை நீடிக்கிறது. ஈரானும் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்காததால், ஐக்கிய அரபு அமீரகம் ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்த்து, குழாய் மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழலில், அபுதாபியின் அல் தப்ரா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள பராக் அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலின் பின்னணி மற்றும் பொறுப்பு குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது பிராந்திய பாதுகாப்பில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.