ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காப்பு நடவடிக்கையாக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு ட்ரோன்கள் அழிக்கப்பட்டதுடன், ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையமும் தாக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 9 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், சமீபத்தில் தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், போர்நிறுத்தத்தை மீறிய செயல் என ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், மே 28 அன்று அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ட்ரோன்களை தற்காப்பு கருதி தாக்கியதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளம் மீது உள்ளூர் நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த தாக்குதல் நடந்த இடம் குறித்து ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. அமைதி உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே இந்த தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.