மும்பையின் கடலோரச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், அதிவேகமாகச் சென்ற பி.எம்.டபிள்யூ கார் மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.20 மணியளவில், மெரைன் டிரைவ் பகுதியிலிருந்து ஹாஜி அலி நோக்கி அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த பி.எம்.டபிள்யூ காரின் ஓட்டுநர், லாலா லஜபதிராய் கல்லூரிக்கு எதிரே உள்ள லோட்டஸ் ஜெட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், வீதியின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் கார் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, கீழே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வாகன நிறுத்தும் பகுதியில் கார் தலைகீழாகப் பாய்ந்தது. இந்த கொடூர விபத்தில் காரின் மேற்கூரை நொறுங்கியதுடன், முன் பகுதியும் கண்ணாடிகளும் முற்றிலும் உருக்குலைந்தன. மேலும், மேம்பாலத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த பெயர்ப் பலகையையும் கார் கிழித்துக் கொண்டு கீழே விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த மற்றொருவர் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை கடலோரச் சாலையில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், அதிவேகத்தால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை மதித்து, மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் குவிந்து வருகின்றன.
