நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில், சுமார் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுமிதாவின் கணவர் வினோத் குமார், தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வினோத் குமார் (36) ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். அவரது மனைவி மதுமிதா (29), யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு ஏராளமான லைக்குகள் கிடைத்து வந்துள்ளன.
குறிப்பாக, மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம், மற்றும் தான் செல்லும் இடங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்களாக வெளியிட்டு வந்துள்ளார். கழுத்து நிறைய நகைகள் அணிந்தும், கட்டுக்கட்டாக பணத்தை மெத்தையில் பரப்பி கொண்டும் அவர் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.
இவரது சமூக வலைதளப் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்த கொள்ளையர்கள், சரியான நேரத்தைப் பார்த்து இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்பதியினர் வெளியே சென்றிருந்ததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்த சுமார் 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், அத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் (மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி) ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்குத் திரும்பி வந்த தம்பதியினர், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மதுமிதா வெளியிட்ட பதிவுகளைக் கொண்டே கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
