தெலங்கானா மாநிலம் கோருட்லாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், பிரபல யூடியூபர் வைஷ்ணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் ஹரி பாபுவும் பழிக்கு பழியாக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஹரி பாபுவை காதலித்து திருமணம் செய்துகொண்ட வைஷ்ணவி, மார்ச் 17, 2026 அன்று தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரி பாபு கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். காவல்துறையின் விசாரணையில், ஹரி பாபுவின் தாய் மற்றும் சகோதரர்களின் தூண்டுதலால், கூடுதல் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை அவர் துன்புறுத்தியதாகத் தெரியவந்தது. பின்னர் ஹரி பாபு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் அவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருந்தன.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஹரி பாபு நிஜாமாபாத்தில் தனது தாயுடன் வசித்து, மக்காச்சோளம் விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமையன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஹரி பாபுவை, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரில் வந்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூரமான தாக்குதலில் ஹரி பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தில், உயிரிழந்த யூடியூபர் வைஷ்ணவியின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஹரி பாபுவின் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும், பிற முக்கிய ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
