சென்னையில் நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள், எழும்பூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட தயாராக இருந்த 'வந்தே பாரத்' ரயிலை மறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால், நெல்லை வந்தே பாரத் ரயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து சூர்யா பிரகாஷ் கூறுகையில், 'மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. வினாத்தாள் கசிந்ததன் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில், போட்டி தேர்வுகளின் வினாத்தாள்கள் 80-க்கும் மேற்பட்ட முறை கசிந்துள்ளன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் நமது மாணவ, மாணவியரை தேர்வு மைய வாசலில் வைத்து பாதுகாப்பு என்ற பெயரில் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் சிறிய கம்மல், கொலுசு போன்ற நகைகளைக் கூட கழற்றச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். ஆனால், வட மாநிலங்களிலோ வினாத்தாள்கள் மிக சாதாரணமாக தொடர்ந்து கசிந்து வருகின்றன. எனவே, தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.

