சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த ஒரு வீடியோவில், கருப்பு உடை அணிந்து பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவில் இருப்பது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என சிலர் தவறாக சித்தரித்து பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, 'அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அப்படியே நான் இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்ற பெண் தான்தான் என்றும், தான் மலேசியாவை சேர்ந்த வினோஷா என்றும் விளக்கம் அளித்துள்ளார். கண்ணீருடன் அவர் அளித்த விளக்கத்தில், 'சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளித்துள்ளது. இது எனது விளக்க வீடியோ மட்டுமே. இது தொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளித்துள்ளேன். காரில் இருந்து இறங்கி வேலைக்குச் செல்லும் என்னை, அமைச்சர் என தவறாக தொடர்புபடுத்தி, அவர் இந்த உடையை அணியலாமா என்று விமர்சித்துள்ளனர். முதலில், அந்த வீடியோவில் இருப்பது நான் தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் எனது புகைப்படத்தை வைத்து ட்ரோல் செய்தனர். எனது உறவினர்களும் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக இருந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்தனர்.
நான் வேலைக்குச் செல்வதற்கு ஏற்றவாறு உடை அணிந்து சென்றேன். அதில் நான் நாகரீகமாக உடை அணியவில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் வேலைக்குச் செல்லும் இடத்தில் அதற்கு ஏற்ற உடையை அணிந்து சென்றேன். என்னை தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள். அந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா இல்லை. இனி காவல் துறையில் புகார் அளித்து வீடியோவை அகற்றுவதில் பலன் இல்லை என நினைக்கிறேன். இருப்பினும், நான் மலேசிய காவல் துறையிலும் புகார் அளித்துள்ளேன். நான் மலேசியாவை சேர்ந்தவள்' என்று அவர் உருக்கமாக கூறினார்.
