சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
'பல்வேறு சவால்கள் வந்தபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி வழங்கினார். அவர்தான் அதிமுகவைக் காத்தவர். கட்சிக்கு ஏற்பட்ட பல சோதனைகளை எதிர்கொண்டு எடப்பாடி வெற்றி கண்டார். தேர்தல் சமயத்தில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அவர் பயணம் மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.
அதிமுக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக சி.வி. சண்முகம் அவதூறான, தவறான தகவலைப் பரப்பியுள்ளார். தனது சொந்த லாபத்துக்காகவும், எம்.எல்.ஏ.க்களைத் தன் பக்கம் இழுப்பதற்காகவும் அவர் இப்படி அவதூறு பேசி வருகிறார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சி.வி. சண்முகம் இப்படிப் பேசுகிறார்.
அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசைதான் அவர்களை இப்படிப் பேசத் தூண்டுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்படுவதை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என்று நம்புகிறோம்' என்றனர்.
அதன்பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'நான்தான் அதிமுகவின் கொறடா. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பார்கள். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
