உங்கள் வாலட்டில் உள்ள தனித்துவமான ஐடி எண்ணை ஹேக் செய்யாமல் பாதுகாக்க, சமையலறையில் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயில் எப்படி உதவும் என்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக, மக்கள் தங்கள் பணப்பைகளை அலுமினியம் ஃபாயில் கொண்டு ஒரு புர்ரிட்டோ போலச் சுற்றி வைக்கும் வீடியோக்கள் பிரபலமடைந்துள்ளன. இது வேடிக்கையாகத் தோன்றினாலும், அமெரிக்க வாலட்டுகளில் உள்ள கார்டுகளின் பாதுகாப்பு நிலை குறித்த தீவிரமான எச்சரிக்கையை இது உணர்த்துகிறது.
வாஷிங்டன் சிவில் லிபர்ட்டிஸ் அமைப்பின் (ACLU) அறிக்கையின்படி, அமெரிக்க ஓட்டுநர் உரிமங்களில் உள்ள தனித்துவமான ஐடி எண்ணை, சாதாரண ஆர்.எஃப்.ஐ.டி ரீடர்களைப் பயன்படுத்தி 162 அடி தூரத்திலிருந்தே ரகசியமாகப் படிக்க முடியும்.
தற்காலத்தில் அரசு அடையாள அட்டைகள், போக்குவரத்து பாஸ்கள், அலுவலக ஐடி கார்டுகள் எனப் பலவற்றிலும் ஆர்.எஃப்.ஐ.டி (RFID) அல்லது என்.எஃப்.சி (NFC) தொழில்நுட்பத்துடன் கூடிய காண்டாக்ட்லெஸ் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிப்களை 30 அடி தூரத்திலிருந்தே எளிதாகப் படிக்க முடியும்.
ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் வெறும் 21,000 ரூபாய் செலவில் ஒரு ரீடரைத் தயாரித்து, காரில் சென்றுகொண்டே கார்டுகளின் தரவுகளை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் ஸ்கேன் செய்து நிரூபித்துள்ளார். இது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
குறிப்பாக, அமெரிக்க 'பாஸ்போர்ட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். சாதாரண கார்டுகளை விட இதன் சிக்னல் வரம்பு அதிகம். கார்டை அதன் பாதுகாப்பு கவரில் இருந்து எடுத்தால், 25 அடி தூரத்திலிருந்தே அது சிக்னல்களை வெளியிடத் தொடங்கிவிடும்.
இந்த சிப்களில் நேரடி வங்கி விவரங்கள் இருக்காது, வெறும் குறிப்பு எண்கள் மட்டுமே இருக்கும். உடனடிப் பணத் திருட்டு நிகழாவிட்டாலும், நீங்கள் எங்குச் சென்றாலும் ஒரே எண்ணைத் தொடர்ந்து வெளியிடுவதால், உங்களை ரகசியமாகக் கண்காணிக்க இது வழிவகுக்கும்.
இயற்பியல் விதிகளின்படி, அலுமினியம் ஒரு சிறந்த மின் கடத்தி. இது ரேடியோ அலைகளைத் தடுத்து, 'பாரடே கூண்டு' கொள்கையின்படி செயல்படுகிறது. வாலட்டில் உள்ள அலுமினியம், ஆர்.எஃப். ஐ. டி ரேடியோ சிக்னல்களைத் தடுக்கிறது.
இருப்பினும், அலுமினியம் ஃபாயில் எளிதில் கிழிந்துவிடும் என்பதால், சிறிய துளைகள் வழியாக சிக்னல்கள் கசிய வாய்ப்புள்ளது. எனவே, பல லேயர்களாகச் சுற்றுவது அவசியம். இது ஒரு தற்காலிக, மலிவான தற்காப்பு முறையே தவிர முழுமையான பாதுகாப்பு அல்ல.
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆர்.எஃப்.ஐ.டி-பிளாக்கிங் ஸ்லீவ்கள் அல்லது வாலட்டுகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர். இது வாலட்டை ஒட்டுமொத்தமாகப் பாதுகாக்க உதவும்.
