நடக்கும்போது உங்கள் வேகம் குறைகிறதா? இது மரண அபாயத்தை குறிக்குமா? உங்கள் உடல்நலம் உங்களுக்கு சொல்லும் எச்சரிக்கை மணி இதுதான். சமீபத்திய ஆய்வு ஒன்று, நடக்கும் வேகத்திற்கும் மரண அபாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நடை வேகம் என்பது நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய குறியீடாக இருக்கலாம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
நடைப்பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் எளிய வழிகளில் ஒன்றாகும். பலர் தங்கள் தினசரி அடிகளின் எண்ணிக்கையை (Step count) கணக்கிடுவதில் கவனம் செலுத்தும் வேளையில், அவர்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறார்கள் என்பதும் அவர்களின் ஆயுட்காலம் பற்றிய முக்கிய தகவல்களை வழங்கக்கூடும். 'ஜமா நெட்வொர்க் ஓபன்' இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வு, நடக்கும் வேகத்திற்கும் மரண அபாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நடை வேகம் என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய குறியீடாக இருக்கலாம் என வலியுறுத்துகிறது.
தானேயில் உள்ள ஜூபிட்டர் மருத்துவமனையின் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் தனஸ்ரீ ஆத்ரே சிங் கூறுகையில், நடக்கும் வேகம் என்பது உடலின் பல்வேறு அமைப்புகள் எவ்வளவு திறம்பட ஒன்றாக செயல்படுகின்றன என்பதைப் பிரதிபலிக்கிறது. இது, ஆக்ஸிஜனை வழங்குவதில் இதயம் மற்றும் நுரையீரலின் திறன், தசைகள் வலிமையை உருவாக்கும் ஆற்றல், இயக்கங்களை ஒருங்கிணைக்கும் நரம்புகளின் செயல்பாடு மற்றும் சமநிலையை பராமரிக்கும் மூளையின் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
மெதுவாக நடப்பது ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை குறிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சிங், நடக்கும் வேகம் படிப்படியாகவோ அல்லது விளக்க முடியாத அளவு குறைவதை வயது முதிர்வின் விளைவாக மட்டும் கருதிவிடக்கூடாது என்று எச்சரித்தார். இது, இதய நோய், தசை இழப்பு, நரம்பியல் கோளாறுகள் மற்றும் பொதுவான உடல் பலவீனம் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.
அன்றாட அடிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்ட பிறகும், நடக்கும் வேகம் மரண அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், வேகமாக நடப்பது உங்கள் ஆயுளை கட்டாயம் நீட்டிக்கும் என்று அர்த்தமல்ல. நகரும் திறன் என்பது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம் என்பதை மட்டுமே இது காட்டுகிறது என்று டாக்டர் சிங் விளக்கினார்.
பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு, வினாடிக்கு தோராயமாக 1 முதல் 1.3 மீட்டர் (மணிக்கு 3.6 முதல் 4.7 கி.மீ) நடக்கும் வேகம் சரியானதாக கருதப்படுகிறது. குறிப்பாக முதியவர்களிடம், வினாடிக்கு 0.8 மீட்டருக்கும் குறைவான வேகம் இருப்பது உடல் திறன் குறைவதை குறிக்கலாம். மேலும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த எண்களை அனைவருக்குமான பொதுவான அளவுகோலாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று டாக்டர் சிங் எச்சரிக்கிறார். வயது, உடல்தகுதி, மூட்டுப் பிரச்சனைகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைமைகள் ஆகியவை நடக்கும் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவர் தனது வழக்கமான வேகத்தை விட கணிசமாக மெதுவாக நடக்கிறார் என்பதை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, முன்பு சுலபமாக நடந்த ஒருவர் இப்போது அதே தூரத்தை கடக்க சிரமப்பட்டால், அதை வெறும் முதிய வயது என்று விட்டுவிடாமல் கூடுதல் கவனத்துடன் பார்க்க வேண்டும்.
உங்கள் நடக்கும் வேகத்தை மதிப்பிட உங்களுக்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. டாக்டர் சிங் நேரத்தைக் கணக்கிடும் ஒரு எளிய நடைப் பரிசோதனையைப் பரிந்துரைக்கிறார். 10 மீட்டர் நேர்க்கோட்டு தூரத்தை குறித்துக்கொண்டு, உங்கள் வழக்கமான, வசதியான வேகத்தில் அந்த தூரத்தை கடந்து நடங்கள். ஸ்மார்ட்போன் ஸ்டாப்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் ட்ராக்கரை பயன்படுத்தி எடுத்த நேரத்தை பதிவு செய்து, வேகத்தை கணக்கிட தூரத்தை (10 மீட்டர்) எடுத்த நேரத்தால் (வினாடிகளில்) வகுக்கவும். உதாரணமாக, 10 வினாடிகளில் 10 மீட்டரை கடந்தால் உங்கள் நடக்கும் வேகம் வினாடிக்கு 1 மீட்டர் ஆகும். இந்த சோதனை காலப்போக்கில் உங்கள் நகரும் திறனில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க உதவுமே தவிர அடிப்படை மருத்துவ நிலைகளைக் கண்டறிய முடியாது. விளக்க முடியாத சோர்வு, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் அல்லது சமநிலை அமைப்பில் பிரச்சனை ஆகியவற்றுடன் உங்கள் நடக்கும் வேகம் எந்த காரணமுமின்றி குறைந்திருந்தால், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது புத்திசாலித்தனமானது என்று டாக்டர் சிங் கூறினார்.

