தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்ததுடன், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நேற்று பதவியேற்றனர். இன்று ஜே.டி.சி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் வரும் 13-ஆம் தேதிக்குள் (அதாவது நாளை) நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்கும் இந்த வாக்கெடுப்பில், அஇஅதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கவுள்ளனர். இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியின் பலம் 151 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், அஇஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவும் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.