இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மே 30 முதல் தொடங்கப்பட உள்ளன.
இந்த சிறப்புப் பணிகள் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்களில் நடைபெறும். மேலும், சண்டிகர், டெல்லி, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல் மற்றும் பிற காரணங்களால், அங்கு எஸ்ஐஆர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சிறப்புத் திருத்தப் பணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புத் திருத்தப் பணிகள் வாக்காளர் பட்டியலை மேலும் துல்லியமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்யும்.