இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த தொடர் கைது சம்பவங்கள், பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களிடையே பெரும் மனவேதனையையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இன்று (6.8.2026) இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாக அவர்களது விசைப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, படகையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்ததாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது, மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இது பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் ஒருவித நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, அவர்களைப் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அமைச்சரை விஜய் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு (JWG) மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டையும், விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 'வாய்மையே வெல்லும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
