திமுகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, தற்போதைய முதல்வர் யார், அமைச்சர்கள் யார் என்பதே தெரியாமல் ஆட்சி நடப்பதாக கடுமையாக விமர்சித்தார். மேலும், முதல்வர் விஜய் தனது அமைச்சர்களின் பெயர்களை சரியாகச் சொன்னால், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது சொந்தப் பணத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் தருவார் என்றும் சவால் விடுத்துள்ளார்.
மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், ஆளும் தவெக கட்சியையும் முதல்வர் விஜய்யையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் ஐ.லியோனி, முதல்வர் விஜய்யை கிண்டலடித்துப் பேசினார். கடந்த ஆண்டு இதே ஜூன் 12 ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்ச்சியில் இப்போதுள்ள முதல்வர் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா? கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் துண்டை மாட்டிக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார். மேட்டூர் அணைக்காக விவசாயிகள் தலையில் துண்டை போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார், அதனால் நானும் போவேன் என்று சென்றுள்ளார்.
'மூகாம்பிகை கோவிலுக்குப் போனால் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம்' என்று தவறான கணக்கு போடும் இன்றைய முதல்வர் ஜோசப் விஜய்க்கு சொல்கிறேன். ஜோதிடத்தை நம்பி இந்த ஆட்சியில் நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். இதே ஜோதிடத்தால் நீங்கள் வீணாகப் போவீர்கள் என்பதை எச்சரிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். இதுவரை அவர் தலையில் கருப்புப் பொட்டு வைத்ததுண்டா? இப்போது ஜோசியக்காரர் சொல்லி இருக்கிறார். கையில் சிவப்பு கயிறு. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், 'உங்களுடைய அமைச்சர் பெயர்களை எல்லாம் வரிசையாக சொல்லுங்க ஐயா. எங்கள் அண்ணன் சேகர் பாபு, உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுப்பார்' என சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் ஐ.லியோனியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.