கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் (VCI) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் மாநிலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் கீழ், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலம் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறையில் நடைபெற வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2026-27 கல்வியாண்டு முதல், தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை, குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என முதல்வர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாநிலத்தின் கால்நடைப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான அடித்தளமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, பல தசாப்தங்களாக மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையைப் பின்பற்றி வருகிறது. இந்த முறை, திறமையான தொழில்முறை வல்லுநர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இது சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.
2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. நீட் போன்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை ஏற்படுத்துவதாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவது, அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது, 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தது போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. எனவே, கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
இத்தகைய அணுகுமுறை, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாகவும், கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும். அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.
எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
