தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய்யின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். 'ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் 100% பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்' என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வெறும் ₹50,000 கடன் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான நம்பிக்கை துரோகம்' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், 'விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றியவர் ஜோசப் விஜய். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் உடனடியாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக சார்பில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'தேர்தலின் போது அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட்டிற்குள் பயன்படுத்தினால் மட்டுமே என நிபந்தனை விதித்தீர்கள். எதற்கு இந்த பித்தலாட்டங்கள், பொய் வாக்குறுதிகள்? முதல்வர் பதவி மீது அப்படியென்ன வெறி உங்களுக்கு?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 99% நிறைவேற்ற முடியாதவை என்பதற்கு இதுவே சான்று என்றும், இதுதான் மாற்று அரசியலின் லட்சணமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தவெக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாமல், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து அவர் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.