தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரசின் செயல்பாடுகள் தமிழகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், வெங்கட் நாராயணா தமிழக நலன்களுக்காக எப்படி குரல் கொடுப்பார் என எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பொதுவாக அரசின் பிரதிநிதிகள் நியமனம் என்பது ஒரு கொள்கை முடிவு. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இதில் சம உரிமை உண்டு. பிரதிநிதிகள் டெல்லிக்குத்தான் செல்கிறார்கள். எனவே, இதில் பெரிய தவறு ஒன்றும் கிடையாது' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'நூற்றுக்கு நூறு சதவீதம் முதல்வரால் நியமிக்கப்பட்ட அனைவரும் தமிழகத்திற்காக குரல் கொடுப்பார்கள். தமிழகத்தின் அனைத்து திட்டங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும், நதிநீர் பிரச்சனைகளையும் முழுமையாக மத்திய அரசிடம் எடுத்துச் சென்று வாதிடுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தயாராக இருப்பார்கள்' என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த விளக்கத்தின் மூலம், வெங்கட் நாராயணா நியமனத்தில் எந்த தவறும் இல்லை என்றும், அவர் தமிழக நலனுக்காக நிச்சயம் குரல் கொடுப்பார் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்த அரசியல் ரீதியான விவாதங்களுக்கு இது ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.