பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார். இந்த பதவி விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த கட்சிக்கும், மூத்த தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகள் உண்மையிலேயே ஒரு வளமான பயணமாக அமைந்தன" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பெண் தொண்டர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாழ்க்கைப் பயணங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், ஒரு தனிநபராக தன்னை வடிவமைத்து, எண்ணற்ற பாடங்களையும் நினைவுகளையும் அளித்ததாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
"நமது பெண் சக்தியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் உறுதி, தைரியம் மற்றும் சாதனைகள். பல பெண்கள் தடைகளைத் தகர்த்து, உயரப் பறப்பதைப் பார்ப்பது ஆழ்ந்த உத்வேகம் அளிக்கிறது" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
மேலும், மத்திய தலைமைக்கும், ஒவ்வொரு தொண்டருக்கும் அவர்களின் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அணிக்கு மாபெரும் வெற்றியும், நிறைவான பயணமும் அமைய வாழ்த்துகள். இந்த அமைப்பை இன்னும் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லட்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திடீர் ராஜினாமா பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

