தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும், ஆயுதங்களைக் கொண்டு வருவதும், ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: "மதி வளர்க்கும் கூடங்களா? இல்லை மதுபானக்கூடங்களா? கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியதாகக் கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது இதன் வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர், சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவமும் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.
'மாற்றம் தருவோம், மாற்றம் தருவோம்' என்று மேடைக்கு மேடை முழங்கி ஆட்சிக்கு வந்த தவெக ஆட்சியின் 'சூப்பரான மாற்றம்' இதுதானா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே?
மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதும், ஆயுதங்களைக் கொண்டுவருவதும், ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல். எத்தனையோ அரசு பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில், இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ, அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்துவிட்டன என்பதுதான் உண்மை. பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும் தான் என்பதை நினைவில் நிறுத்தி, இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
