பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கான இறக்குமதி வரிகளை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் ஹெச்1பி விசா கட்டண உயர்வு ஆகியவை இந்தியா – அமெரிக்கா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தின. இதனால் அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தார். பின்னர், இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்தது, இது இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

இந்தச் சூழலில், இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று இந்தியா வந்தார். தனது முதல் பயணமாக கொல்கத்தா சென்ற அவர், புனித அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பின் தலைமையகமான ‘மதர் ஹவுஸ்'-க்குச் சென்றார். அதன் பின்னர், நேற்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி, ராணுவம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான தொடர்பு, மேற்கு ஆசியா நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் மார்கோ ரூபியோ விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர், பிரதமர் மோடியை அமெரிக்கா வருமாறு அதிபர் ட்ரம்ப் சார்பில் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், 'அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் குறித்து ஆலோசித்தோம். உலக நன்மைக்காக இரு நாடுகளும் எப்போதும் இணைந்து செயல்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version