20,000 டன் LPG உடன் ஹார்முஸ் கடந்து வந்த Symi கப்பல்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தியாவிற்கு தேவையான 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் Symi என்ற எல்.பி.ஜி கப்பல் பத்திரமாக குஜராத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் தாண்டி, இந்த கப்பல் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துள்ளது. கடந்த மே 13 அன்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரமடைந்த பிறகு, பாதுகாப்பாக இந்தியா வந்து சேரும் 11வது எல்.பி.ஜி கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், இந்தியாவில் வணிக சிலிண்டர் விலையில் இந்த மாத தொடக்கத்தில் மட்டும் 993 ரூபாய் அதிகரித்தது. தொடர்ந்து கப்பல்கள் மூலம் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டால் மட்டுமே, தற்போது நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதனிடையே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 15% சரிந்துள்ளது. பிப்ரவரி கடைசி வாரத்தில் 107 மில்லியன் பேரல்களாக இருந்த இருப்பு, தற்போது 91 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது. வரும் நாட்களில் புதிய சரக்குகள் வந்து சேரவில்லை என்றால், இந்தியாவில் இன்னும் 18 நாட்களுக்கு மட்டுமேயான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version