தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்ற நிலையில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தமிழகத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.
திமுக சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றும் இந்த மாபெரும் பொறுப்பைத் தனக்கு வழங்கிய கழகத் தலைவர் எங்கள் உயிரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது அன்பான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் மக்களின் குரலை எதிரொலிக்கும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று உதயநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம் என்றும், தங்கள் தலைவர் குறிப்பிட்டது போல, எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஊடகமாகத் தாங்கள் செயல்படுவோம் என்றும், தன் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த இந்தப் பொறுப்புக்கு 100% நேர்மையாகவும் கடுமையாகவும் உழைப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.