முதலமைச்சரை விமர்சித்த MLA கைது: உதயநிதி கண்டனம்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்ற காரணத்திற்காக கைது செய்துள்ள ஆளும் அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்ற கண்ணியத்தையும் பாராமல், அதிகாலை 6 மணிக்கே காவல்துறையை அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலகத்தில் அடைத்து வைத்திருப்பது உச்சகட்ட அடக்குமுறை. ஜனநாயக விரோதப் போக்கின் வெளிப்பாடாகவே இதைக் கருதுகிறேன்.

இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, எந்தவிதமான கைது நடவடிக்கையும் இன்றி லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், ஆளும் கட்சிக்கு எதிராகப் பேசிய கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறிவைத்து காவல்துறை கைது செய்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால், அங்கு ஆளும் அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையும், ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் இன்மையையும் காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற – விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் நிச்சயம் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிக்கும் வகையில் ஆளும் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்றும், அதனை நசுக்க முயற்சிப்பது தவறு என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version