தமிழக அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சும் தவெக அரசால் எப்படி வெளிப்படையான ஆட்சியை வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு அரசின் பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வரும் சமுதாய மற்றும் சாதிய மோதல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள், அரசியல் காரணங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான விவரங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கும் வகையில் அரசிதழ் பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் தாராளப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்து தகவல்களும் 'Intelligence' உடன் தொடர்புடையது என வகைப்படுத்தி மூடி மறைக்க முயல்வது, அதன் நிர்வாகத் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம்' என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் அதிகார பயன்பாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களை மக்களின் பார்வைக்கு எட்டாத வகையில் மறைத்து வைப்பது எந்த வெளிப்படைத்தன்மையில் வருகிறது என்பதை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அரசின் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயலும் தவெக அரசு, தனது ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை முழுமையாகத் துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசு நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கவே முடியாது என்பதை உணர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிக்கும் அரசிதழை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்' என்று தனது அறிக்கையில் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திடீர் விலக்கு, அரசின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதால், இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
