பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) காப்புகட்டுதலுடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், நவம்பர் 16-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். காப்புகட்டுதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை என கோலாகலமாக விழா துவங்கியுள்ளது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சிங்காரவேலர் நவம்பர் 11-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை காலை 8 மணிக்கு கேடயத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். நாள்தோறும் காலை சண்முகார்ச்சனை, இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பச்சை மயில், சேஷ, ரிஷப, வெள்ளி அன்னம், மயில், ஆட்டுக்கடா வாகனங்களில் திருவீதி உலா காணப்படுகிறது.
நவம்பர் 13-ம் தேதி இரவு 7 மணிக்கு வேலவர் சிங்கார அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நவம்பர் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு சிங்கார வேலவர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கந்த சஷ்டி தினமான நவம்பர் 15-ம் தேதி, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணியசுவாமி சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளிக்கும் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நவம்பர் 16-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருச்செந்தூர் உட்பட எந்த ஒரு முருகன் கோயிலிலும் இல்லாத வகையில், வயலூர் முருகன் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதேபோல், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததோடு, கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வயலூர் முருகன் கோயில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
