இந்திய பங்குச்சந்தை இன்று (12.05.2026 – செவ்வாய்கிழமை) கடும் சரிவைச் சந்தித்தது. வர்த்தகம் முடிவடைந்தபோது, நிஃப்டி 436 புள்ளிகள் சரிந்து 23,379 புள்ளிகளில் நிலைபெற்றது. பேங்க் நிஃப்டி 884 புள்ளிகள் குறைந்து 53,555 புள்ளிகளிலும், பின் நிஃப்டி 518 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,137 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் குறைந்து 74,559 புள்ளிகளிலும், மிட்கேப் நிஃப்டி 361 புள்ளிகள் சரிந்து 13,972 புள்ளிகளிலும் முடிந்தது. பேங்க் எக்ஸ் 1,042 புள்ளிகள் சரிந்து 60,332 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தையின் இந்த சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பங்குச்சந்தையில் இருந்து நேரடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளே இன்றைய பங்குச்சந்தையின் கடுமையான வீழ்ச்சிக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.