பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை சூழலைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்கடன் தள்ளுபடி நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தற்போது மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மாணவர்களின் உடல்நலம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக வெப்பத்தில் பள்ளிக்குச் செல்வதால் நீரிழப்பு, சோர்வு, வெப்பக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதிக வெப்பம் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிப்பதுடன், அவர்களின் கற்றல் மற்றும் கவனிக்கும் திறனையும் குறைக்கக்கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு தள்ளிப்போட வேண்டும் என்றும், பள்ளிகளில் போதுமான குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பு அரசின் முதன்மையான பொறுப்பு என்பதால், வெப்ப அலை சூழ்நிலையை தீவிரமாகப் பரிசீலித்து உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார். 'கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க் கடன்களில், குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், சிறு விவசாயிகளின் அதே அளவுக்கான கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும். இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளின் சுமையையும் முழுமையாகக் குறைக்காது என்றாலும், தற்போதைய பொருளாதார சூழலில் உழவர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் முயற்சி' என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான விதைகள், உரங்கள், இடு பொருட்கள் மானிய விலையில் கிடைக்கவும், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள புதிய கடனுதவிகள் எளிதில் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை ஓரளவு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version