நீதிநெறி மறந்து, அரசியலை ஒரு வியாபாரமாக மாற்றியுள்ள திமுக, தான் விதைத்த வினைகளை விரைவில் அறுவடை செய்யும் என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பதிலடி கொடுத்துள்ளது.
தவெக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், 'அரசியலை வியாபாரமாகச் செய்யும் திமுக, தற்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மத்துடன் வளர்த்து வருகிறது. இதைக் கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது. திமுக-வின் மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை அனைவரும் தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிகமான அரசியலைச் செய்வதை தமிழக மக்கள் தினமும் பார்த்து வருகின்றனர். ஆனால், மக்களை மறந்து, தான் என்ற திமிரில் திமுக வழக்கம்போல அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகப் பண்புகள் அறவே இல்லாமல் திமுக செயல்பட்டதால்தான் தற்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. இருந்தபோதிலும், அதிகார மமதை இன்னும் குறையாமல், காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார். எது சத்திய ஆட்சி, எது சாத்தானின் ஆட்சி என்பதை மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கும் தெரியும்.
அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், கண்மூடித்தனமாக வழக்குகள் போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்ததை மறந்துவிட்டு, தீயசக்தி திமுக-வினர் ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கியுள்ளனர். நீதிநெறி மறந்து, அரசியலை ஒரு வியாபாரமாக மாற்றியுள்ள திமுக, தான் விதைத்த வினைகளை விரைவில் மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

