திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமாகவும் பொறுப்புணர்வுடனும் வெளிப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக பெண்களைப் பற்றியோ அல்லது அவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையிலோ பேசுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுப்பு உண்டு என்றும், அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகள், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான களம் என்றும், அது பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கான இடம் அல்ல என்றும் கனிமொழி சந்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சை, ஒரு பெண்ணாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதை வெறும் அரசியல் கருத்து வேறுபாடாக மட்டும் கடந்து செல்ல முடியாது என்றும், பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட வேண்டிய மரியாதை மற்றும் கண்ணியம் குறித்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலையில், அதற்கு மாறான எந்தவொரு பேச்சும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் அதிகாரமோ, பதவியோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசுவதற்கான உரிமையை வழங்கிவிடாது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு யாரிடமிருந்து வந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பும் ஆகும் என்றும் கனிமொழி சந்தோஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்திற்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் உட்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பெண்களின் கண்ணியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், ஒரு பெண்ணின் மரியாதையை அவமதிக்கும் வார்த்தைகள் எங்கிருந்து வந்தாலும், அதற்கு எதிராக பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும், பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், இதுதான் நாகரிகமான தமிழ்நாட்டின் குரல் என்றும் தனது அறிக்கையில் கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.
