திமுகவை அழிக்கும் எண்ணத்துடன் செயல்படுபவர்களுக்கு இதுதான் முடிவு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபை அரசியல் குறித்த தனது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
'என்னுடைய 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் 'மாமன் மச்சான்' என யாரையும் அழைத்ததில்லை. அரசியல் எதிரிகளை எதிரியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டசபைக்குள் 'மாமன் மச்சான்' உறவுமுறை ஏன்? அண்ணன், தம்பி என்றெல்லாம் அரசியலில் அழைப்பது என் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது' என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.
மேலும், தன்னை வளர்த்த எம்ஜிஆர், அமைச்சர் பதவி தருவதாக அழைத்தபோதும், திமுகவில் உறுதியாக இருந்ததை எம்ஜிஆர் பாராட்டியதாக அவர் நினைவு கூர்ந்தார். 'அப்பேற்பட்ட எம்ஜிஆரையே சட்டசபையில் நேருக்கு நேர் கேள்வியெழுப்பியவன் நான். எதிர்க்கட்சியினர் வாளுடனும், ஆளுங்கட்சியினர் கேடயத்துடனும் சட்டசபைக்கு வர வேண்டும். ஒருவரையொருவர் எதிர்கொண்டு, தடுக்க முடிந்தால் தடுக்க வேண்டும், இல்லையென்றால் மரியாதையுடன் செல்ல வேண்டும்' என்றும் அவர் விளக்கினார்.
தொடர்ந்து, இனி வரும் நாட்களில் திமுக சட்டசபைக்கு வர முடியாது, வெல்ல முடியாது என தமாகவினர் பேசியது குறித்து கேட்டபோது, 'யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்குப் பின்னால் யாரும் வரமாட்டார்கள் என்றுதான் சொல்வார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரும் அவ்வாறே கூறினர். அவர்களை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது ஒரு பெருமைக்காக பேசப்படும் சொல், அரசியல் ஞானத்தோடு சொல்லப்படும் சொல் அல்ல' என்று பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்த செய்திகள் குறித்து பேசிய துரைமுருகன், 'கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். கார் இல்லை என்று சொன்னவர்களிடமே பல கார்கள் இருப்பதாகவும் செய்திகளில் பார்த்தேன். ஏற்கனவே கார் உள்ளவர்களுக்கு மீண்டும் கார் வழங்குவது தேவையில்லை என்பதே மக்களின் கருத்து. திமுகவைப் பொறுத்தவரை, எங்களிடம் கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு அது தேவையில்லை' என்றார்.
அமைச்சர் நிர்மல் குமார், 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்' என விமர்சித்தது குறித்து கேட்டபோது, 'இவரைப் போன்ற பலர் இதை முன்பே சொல்லியிருக்கிறார்கள். திமுக முளைத்ததிலிருந்தே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. எங்களை விட்டு சென்ற பலர் மீண்டும் எங்களிடம் வந்துள்ளனர். திமுகவை எதிர்த்து கட்சி நடத்தியவர்கள் அனைவரும் இறுதியில் திமுகவிடமே அடக்கமாகிவிட்டார்கள்' என்று துரைமுருகன் உறுதியாகக் கூறினார்.
