பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த ஒரே முருகன் கோவில், சுமார் 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இக்கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தினந்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ தினங்களிலும், பௌர்ணமி தினத்தன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடலில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பின்படி, இனி கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரையிலும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

