தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ எடுபடாது – ஆர்.பி.உதயகுமார்

தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் 'மாஸ்' எடுபடாது - ஆர்.பி.உதயகுமார்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வீசும் அலை குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'தாராபுரம் இடைத்தேர்தலில் இரட்டை இலை அலை வீசுவதை நேரில் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு அதிமுக தொண்டருக்கும் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்துள்ளது. எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த அதிமுகவின் வெற்றி வேட்பாளர் பானுமதி, தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்பதை காண முடிகிறது. இது இரட்டை இலையின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்திக்கிறார்' என்று கூறினார்.

இந்த உற்சாகமான சூழலுக்கு மத்தியில், ஆளும் தவெக அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை தேர்தல் களத்தில் உணர முடிவதாகவும் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார். 'தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களும் விவசாயிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் சத்தியபாமா பல இடங்களில் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு செல்கிறார்' என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக வேட்பாளர் சத்தியபாமா பிரச்சாரம் செய்யச் சென்றபோது, பிஏபி பாசன விவசாயிகளும் பொதுமக்களும் அவரை வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். 'கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு, உழைத்த கட்சிக்கு, தலைமைக்கு துரோகம் செய்த சத்தியபாமாவை தாராபுரம் வாக்காளர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதற்கு அவர் செல்லும் இடங்களில் எழும் எதிர்ப்பு அலையே சாட்சியாக உள்ளது' என அவர் கடுமையாக விமர்சித்தார்.

தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் ஆர்.பி.உதயகுமார் பட்டியலிட்டார். 'விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது, பிஏபி விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாதது, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளன. தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்காதது, முதியோர் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க உத்தரவு பிறப்பிக்காதது, நான்கு மாதங்களில் 40,000 கோடி கடன் வாங்கியிருப்பது என தவெக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது' என்று அவர் கூறினார்.

மேலும், 'தன்னுடைய அனுபவக் குறைவால், நிர்வாகத் திறமையின்மையால், மக்கள் மீது அக்கறை காட்டாமல், அம்மா அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி விழா நடத்துவதோடு கடமை முடிந்ததாக ஆளும் கட்சியினர் நினைக்கின்றனர்' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

'நீதியை நிலைநாட்டி, தர்மத்தைக் காக்க தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அதிமுக தொண்டர்கள் எடப்பாடியார் தலைமையில் பணியாற்றுகிறார்கள். முதல்வர் விஜய்யின் 'மாஸ்' இந்தத் தேர்தலில் தவெகவிற்கு கை கொடுக்க வாய்ப்பே இல்லை என்ற கள நிலவரமே நமக்கு வந்து கொண்டிருக்கிறது' என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

'முதல்வர் விஜய்யின் முகத்தை ஒருமுறை காட்டினால் போதும் தவெகவுக்கு வெற்றி உறுதி என்ற நிலையிலிருந்து, அவர் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தாலாவது ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியை சரிசெய்து வெற்றியை உறுதி செய்ய முடியுமா என்ற அடிப்படையில் தான், முதல்வர் விஜய் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கியுள்ளார். தவெகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும், சவால்களையும், ஏற்படப்போகும் சறுக்கல்களையும் முதல்வர் விஜய்யின் மாஸ் பிரச்சாரம் சரிசெய்யும் என்ற நம்பிக்கையோடு தவெக தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்' என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version