தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோயில்களில் நடைபெறும் அனைத்து விழாக்கள், கும்பாபிஷேகங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயில்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், கோயில்களில் விஐபி தரிசனம் மற்றும் பிற வசதிகள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணி கோயிலுக்கு சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி கோயில்களுக்கு வரும் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே அறநிலையத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது விஐபிக்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், அவர்கள் வருவதற்கு குறைந்தது ஒரு நாள் முன்னதாகவே, அவர்கள் வரவிருக்கும் திருக்கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை போன்ற முழு விவரங்களையும் அமைச்சரின் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை இனிவரும் காலங்களில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், கோயில்களில் மொபைல் போன் பயன்பாடு குறித்தும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வருகின்ற செப்டம்பர் 1, 2026 முதல், அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பக்தர்கள் மொபைல் போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட உள்ளது. இதற்காக, பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க லாக்கர் வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருக்கோயில்களுக்குள் இறைவனின் திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, கோயில் வளாகத்தில் புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் ஊடகங்களுக்கு விஐபிக்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் நடைபெற்றதாக செய்திகள் வெளியானால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார். மேற்கண்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய விதிமுறைகள் பக்தர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
