தமிழக அரசு 'மூடியதாக' அறிவித்த 717 டாஸ்மாக் கடைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தவெக அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பலவும் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுகின்றன. இருப்பினும், டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டியலை வெளியிடாமல், மாற்று சக்தி அரசு சப்பைக் கட்டு கட்டி வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஆய்வு என்று குதிப்பதும், முறுக்கு பாக்கெட்டின் உற்பத்தி தேதிக்கு ஆதாரம் கேட்பதும் என 'விஞ்ஞான' ரீதியாக ஆட்சி செய்யும் தவெக ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு ஏன் தயங்குகிறார்கள்? மடியில் கனமில்லையெனில் பயம் ஏன்? தூய சக்தி என முழங்கிவிட்டு, உண்மையை வெளியிடத் தயங்கலாமா?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, காலந்தாழ்த்துவதை விடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதல்வர் திரு. விஜய் அவர்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என்று நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை இன்னும் செயல்படுவதாக வரும் புகார்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் அரசு காட்டும் தயக்கம் பொதுமக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.