தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை தனியாருக்கு ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 2003 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, மக்கள் நலன், வருவாய் பாதுகாப்பு மற்றும் மது விற்பனையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மது விற்பனை அரசுடமையாக்கப்பட்டு, மாநிலத்தின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் திகழ்கிறது. குறிப்பாக, 2024-25 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் ₹48,344 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி, மொத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை என அனைத்தையும் அரசு தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அரசுக்குக் கிடைத்தது. இந்த வருவாய், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிமுக அரசு, மக்களின் நலன் மற்றும் அரசு வருவாயைப் பெருக்கும் நோக்கில் மது விற்பனையை அரசுடமையாக்கியது.
இந்நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுள்ள தவெக தலைமையிலான அரசு, 'டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் கண்ணியம் இல்லை' என்ற காரணத்தைக் கூறி, அவற்றை தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கடைகளில் இருந்து படிப்படியாகத் தொடங்கப்பட உள்ளது.
மொத்தமாக 4,048 டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மதுபான விற்பனை தனியார் வசம் உள்ளதைப் போல, தமிழ்நாட்டிலும் தனியார்மயமாக்குவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் கெட்ட பெயரைத் தவிர்க்கலாம் என்றும், கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்றும் அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மதுபான விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை தமிழக வெற்றிக்கழக அரசு விரும்புவதில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் முடிவு, தமிழகத்தின் மதுபான கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
