மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
சமீப காலமாக, சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாகவும், தனக்கும் இதே நிலைமைதான் என்றும் நடிகை வைஷாலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில், TANGEDCO தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.
மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என TANGEDCO திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கோடை காலம் நீண்டுகொண்டே சென்றதன் காரணமாக, மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்ததே, கட்டணம் உயர்வதற்கு முக்கியக் காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வில், இதுவரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், வெறும் 0.75% இணைப்புகளில் மட்டுமே மீட்டர் வாசிப்பு மற்றும் கணக்கீடுகளில் தவறுகள் கண்டறியப்பட்டு, அவை உடனடியாகச் சரி செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசின் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோர்களும் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இலவச மின்சாரத்தைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
ஜூலை மாதம் வரை நீடித்த கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளதே தவிர, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகப் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று TANGEDCO கேட்டுக்கொண்டுள்ளது.
மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 9498794987 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது எக்ஸ் (X) தளம் மூலமாகவோ உடனடியாகத் தொடர்புகொண்டு தீர்வு காணலாம் என்றும் TANGEDCO தெரிவித்துள்ளது.
