தமிழ் மக்கள் அனைவருக்கும் “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த சிறப்புமிக்க நாளில், அனைத்து தமிழ் மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1 ஆம் தேதியையும், 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட அண்ணாதுரை சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக விளங்கும் தமிழகத்தை, சமத்துவம் மற்றும் சமூகநீதி தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்த நன்னாளில் உறுதியேற்போம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழின் இனிமையும், தமிழரின் உயரிய பண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்து தழைத்தோங்கட்டும் என்றும், தமிழகம் உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்த நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம் என்றும் முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
