தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில், 'தமிழ்நாட்டின் கணக்கு புத்தகத்தை உங்கள் முன் திறந்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி குறைவாக உள்ளதாகவும், மத்திய அரசிடம் இருந்து நிதிப் பகிர்வு சரியாகக் கிடைக்கவில்லை என்றும் கூறினார். மாநில ஜிடிபியில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92% உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், ஒவ்வொரு தனி மனிதர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25%ல் இருந்து 2.22%-ஆக மோசமடைந்துள்ளது.
கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயைப் பெருக்க முடியும் என்றும், ஓட்டைகளை வைத்துக்கொண்டு வரியை விதிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.