தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, மாநிலத்தின் கனிம வளங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். 'இதுவரை காணாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காணாமல் போன மலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்று அவர் கேட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எலும்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமும், 3 ஏக்கர் பரப்பளவும் கொண்ட பிரம்பரசி மலை, 2006 முதல் 25 மீட்டர் உயரம் வரை வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போனதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதேபோல், அரணைரை கிராமத்தில் 90 மீட்டர் உயரமுள்ள கோனாரிபோலை மலை, 2004 முதல் சுமார் 8 ஏக்கர் பரப்பில் வெட்டி எடுக்கப்பட்டு மறைந்து போனது. செங்குணம் கிராமத்தில் 25 மீட்டர் உயரமுள்ள செங்குணம் மலையும் 2026 ஆண்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் 20 மீட்டர் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்திலும் மலைகள் காணாமல் போயுள்ளன. கீழவளவு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 50 மீட்டர் உயரத்தில் இருந்த சக்கரைப்பிர மலை, 2003க்குப் பிறகு 7.5 ஏக்கர் பரப்பளவில் காணாமல் போனது. குண்டைம்பட்டி கிராமத்தில் 35 மீட்டர் உயரமுள்ள குன்று, 2021-க்கு பிறகு சுமார் 5 ஏக்கர் பரப்பில் வெட்டி எடுக்கப்பட்டு மறைந்து போனது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பேட்டை கிராமத்தில் 10 மீட்டர் உயரமுள்ள குன்று, 2024 ஆண்டு முதல் சுமார் 2 ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போனது. ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலை கிராமத்தில் 16.16 ஹெக்டேர் பரப்பளவு, 70 மீட்டர் உயரம் கொண்ட அனந்தலை மலை 1998-க்கு பிறகு காணாமல் போனதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் முத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு, 6 மீட்டர் உயரம் கொண்ட ஒரு குன்றும், 3 ஏக்கர் பரப்பளவு, 10 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு குன்றும் 2022-க்கு பிறகு காணாமல் போனதாக அவர் சுட்டிக்காட்டினார். தென்காசி மாவட்டம், அரியநாயகபுரம் கிராமத்தில் 7.5 ஏக்கர் பரப்பளவு, 50 மீட்டர் உயரம் கொண்ட கோணமலை 1999-க்கு காணாமல் போனது.
'நான் கூறியது அனைத்தும் ஒரு சாம்பிள் தான். இது போன்ற பல குன்றுகள் தமிழகத்தில் காணாமல் போய்விட்டன. காணாமல் போன மலைகள் எல்லாமே சுமார் 320 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மனிதர்கள் வருவதற்கு முன்பே பூமியில் தோன்றியவை இவை. ஒரு மலை ஒரு வருடத்தில் இருந்து மூன்று வருடத்திற்குள் முழுவதுமாக வெட்டி எடுக்கப்பட்டு மண்ணாகப்பட்டுள்ளது' என அமைச்சர் பிரபு வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதால், காலம் காலமாக மண்ணைக் காப்பாற்றி வந்த கண்மாய், ஏரி, குளம் போன்ற நீராதாரங்களும் பாழ்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நீர்நிலைகளில் இருந்து மண்ணை அளவுக்கு அதிகமாக அள்ளி, அவற்றை ஆழப்படுத்தியதால், நீர் தேங்க வேண்டிய இடங்கள் பாறைகளாக மாறியுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் ஆழத்திற்கு சென்று, விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை அளித்த சொத்தான நீர்நிலைகளைப் பாதுகாக்காவிட்டால், வருங்கால தலைமுறைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கு தீர்வாக, செயற்கை மணல் தயாரிப்பைக் குறைத்து, வாய்ப்புள்ள இடங்களில் இயற்கையான முறையில் மாற்று மணல் தயாரித்து, அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அரசு கண்மாய் மற்றும் ஏரிகளில் தேங்கியுள்ள மண்ணை, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு நிறுவனங்கள் மூலம் முறையாக வெட்டி எடுக்கவும், கட்டுமானத் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து கனிமங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.
குவாரிகளில் பயன்படுத்தாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள கழிவுக் கற்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஆற்று மணல், எம்-சாண்ட், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் என பல்வேறு வழிகளை ஒருங்கிணைத்து, பல்முனை மணல் விநியோக முறையை உருவாக்குவது அவசியம். குறிப்பாக மலேசியா, கம்போடியா ஆற்றுப் பகுதி மற்றும் தைவான் ஆகிய இடங்களில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 2,210 வாகனங்கள் பிடிக்கப்பட்டு, 1,954 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 34.9 சதவீதம் அதிகம். 2026 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 298 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டு, 105 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 46.7 சதவீதம் அதிகம். ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 499 குவாரிகளுக்கு மொத்தம் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.46 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 108 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ரூ.150 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும் அமைச்சர் பிரபு விளக்கினார்.

