தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து, வென்டிலேட்டரில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு வலியுறுத்தினார்.
#SofaModel ஆட்சியில், வடக்கே நடக்கும் குற்றங்கள் தமிழ்நாட்டிலும் தினசரி தொடர்கதையாகி வருவதாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வேதனை தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை வாக்குக்கேட்பதற்கு பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்சி பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆலந்தூரில் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது, சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை என பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு வென்டிலேட்டரில் இருக்கும் அளவுக்கு சீரழிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அடுத்த கட்சி ஆட்களை வாங்கும் நேரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அக்கறை காட்ட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். இனியும் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்தால், மக்களை திரட்டி போராட தி.மு.கழகம் தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.