69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பல தசாப்தங்களாக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனை உறுதி செய்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கையாண்டு, மக்களின் உரிமைகளை சமரசமின்றி பாதுகாக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதாரண சலுகை அல்ல. இது சமூக நீதிப் போராளிகளின் தொடர் போராட்டங்களாலும், மக்களின் தியாகங்களாலும் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமிதம் மிக்க உரிமையாகும். 1992-ல் உச்ச நீதிமன்றம் 50% வரம்பு விதித்தபோதும், தமிழகத்தின் தனித்துவமான சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, 1993-ல் தனிச் சட்டம் இயற்றி, இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இணைத்து பாதுகாப்பு பெறப்பட்டது. இந்த சட்டப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய வழக்கில், தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்த துல்லியமான, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களைத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து சமூக நீதி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.

முதல்வர் இதுகுறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் மக்களின் பிரதிநிதியாக தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version